tna seithi founder

A TNAUK Publication

புதிய பாரளுமன்றத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும்

Anonymous 2018-05-13 19:15:00

ஜனநாயகத்தை கட்டியெழுப்ப இந்த பாராளுமன்றத்தை கலைத்து புதிய பாரளுமன்றத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என  கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற குழுத்தலைவர் தினேஷ் குணவர்தன எம்.பி தெரிவித்தார். 

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போது உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்

வரலாற்றில் பல ஜனாதிபதிகள் இக்கட்டான சூழலில் பாராளுமன்றத்தை ஒத்தி வைத்து மீண்டும் கூட்டியுள்ளனர். அவ்வாறான சந்தர்ப்பங்களில் ஜனாதிபதிகள் பல முக்கியமானதும் நாட்டுக்கு அவசியமான உரைகளை நிகழ்த்தியுள்ளனர். இம்முறையும் ஜனாதிபதி அவ்வாறான ஒரு தேசிய ஒருமைப்பாடு குறித்தும் நாட்டின் வளர்ச்சி மற்றும் நெருக்கடிகளில் இருந்து மீண்டெழும் கொள்கைகள் குறித்து முக்கிய உரை நிகழ்த்துவார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜனாதிபதியின் உரை அவ்வாறு ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உரையாக அமையவில்லை. மேலும் இந்த நாட்டில் இடம்பெற்ற முக்கிய ஊழலான மத்திய வங்கி ஊழலின் பின்னர் மத்திய வங்கி மீதான இந்த நாட்டு மக்களின் நம்பிக்கை இழக்கப்பட்டது. இவ்வாறான ஒரு சூழலில் அதில் இருந்து மீளும் எந்தவித ஆலோசனைகளையும் ஜனாதிபதி தனது உரையில் சுட்டிக்காட்டவில்லை. அதேபோல் இந்த நாட்டின் தேசிய வியாபாரிகளை நசுக்கி வெளிநாட்டு வியாபாரிகள் மாத்திரம் நலன் காணும் பல்வேறு சர்வதேச உடன்படிக்கைகள் இந்த அரசாங்கத்தின் மூலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றி ல் இருந்து எமது தேசிய வியாபாரிகளை உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுப்பது குறித்து சுட்டிக்காட்டவில்லை.

இன்று நாட்டில் ரூபாயின் விலை வீழ்ச்சி கண்டுள்ளதுடன் பொருளாதார ரீதியில் பாரிய நெடுக்கடி ஏற்பட்டுள்ளது. நாட்டின் கடன் சுமைகள் நெருக்கும் நிலையில் பொருளாதார உயர்வினை முன்னெடுக்கும் காரணிகள் எவை யும் ஜனாதிபதிக்கு தெரியவில்லை என்றே அவரது உரை சுட்டிக்காட்டுகின்றது. அத்துடன் இந்த நாட்டின் மீதான சர்வதேச நெருக்கடிகள் இராணுவ தண்டிப்புகள் அதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் அவற்றினை தடுக்கும் தெளிவான வேலைத்திட்டம் உள்ளக நகர்வுகள் குறித்து எந்த வார்த்தையையேனும் ஜனாதிபதி தெரிவிக்கவில்லை. அரசாங்க நெருக்கடிகள் குறித்தோ அல்லது மக்களின் வாழ்வாதார நெருக்கடிகள் குறித்தோ எந்த ஆரோக்கியமான கருத்துக்களையும் முன்வைக்கவில்லை. ஆகவே ஜனாதிபதியின் உரையில் தனது ஆட்சியின் மீதான நம்பிகையின்னமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அரசாங்கம் இன்று வீழ்ச்சி கண்டுள்ளது. அராஜகம் நிலவுகின்றது. இந்த வார்த்தைகளை நான் மிகவும் வருத்ததுடன் வெளிப்படுத்துகின்றேன். நாட்டுக்குள் நெருக்கடிகள் உள்ளன. அரசாங்கமாக இவற்றினை நிவர்த்தி செய்ய வேண்டும். அதற்கு அரசாங்கத்தின் தலையீடுகள் அவசியமாகும்.

ஆனால் அரசாங்கம் தொடர்ந்தும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றதை தவிர்க்க முடியாத நிலைமை காணப்படுகின்றது. 16 அமைச்சர்கள் அரசாங்கத்தில் இருந்து விலகியுள்ளனர். இது பாரிய பிரச்சினையாகும். ஆகவே இன்றைய நிலைமைகளை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும். ஜனநாயக ஆட்சியில் இவை அடையாளங்கள் என கூறிய போதிலும் இந்த ஆட்சியில் ஜனநாயக பண்புகள் எவையும் இல்லை. தேசிய அரசாங்கம் என கூறியமைக்கு இந்த ஆட்சியில் கூட்டணி ஒற்றுமையும் இல்லை. இந்த காரணிகளை ஜனாதிபதேயே கூறுகின்றார். இந்த கூட்டணியில் இணைந்து பயணிக்க முடியாது என்பதை அவர் பல்வேறு விதத்தில் வெளிப்படுத்தியுள்ளார். ஆகவே முரண்பாடுகள் நீடிக்கின்றமை தெளிவாக தெரிகின்றது. அதேபோல் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்துமே மீறப்பட்டுவிட்டன. அமைச்சரவையை 30-40 உடன் நிறுத்திக் கொள்வதாக வாக்குறுதி கொடுத்தனர். ஆனால் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்துமே மீறப்பட்டுள்ளன.

 ஐக்கிய தேசியக் கட்சியின் பரந்த பொருளாதார கொள்கையின் கீழ் அன்று நல்ல மாற்றங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதனை நாங்கள் வரவேற்றோம். ஆனால் இன்று எதனையும் கருத்தில் கொள்ளாது இந்த அரசாங்கம் அனைத்தையும் வீழ்த்திவிட்டது. நாளைய தினம் என்ன நடக்கும் என்று எந்த வாக்குறுதிகளையும் கொடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. மேலும் எமக்கு உற்பத்திகள் என ஒன்றுமே இல்லை. உடனடி உற்பத்திகள் எவையும் இல்லை. பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன . ஆனால் மறுபுறம் மத்திய வங்கி ஊழல் குற்றவாளிகள் குறித்து எந்த நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுப்பதாக தெரியவில்லை. ஜனாதிபதியின் உரையில் இந்த ஊழல் குறித்து எந்த சுட்டிக்காட்டலோ விசாரணைகள் நடத்தக் கோரியோ எந்தவித கருத்துக்களையும் முன்வைக்கவில்லை.

 மூன்று மாகாணசபைகள் கலைக்கப்பட்டுள்ளன. இவற்றிற்கான தேர்தல்கள் நடத்தப்படாது மாகாணசபை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல்கள் குறித்து ஜனாதிபதி எந்த கருத்துக்களையும் முன்வைக்கவில்லை.மேலும் மூன்று மாகாணசபைகள் விரைவில் கலைக்கப்படவுள்ளது. அவற்றை கையாள்வது குறித்தும் எந்த திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை. ஆகவே தேர்தல் இல்லாத ஆட்சியா இந்த அரசாங்கத்தின் கொள்கை என்பதை ஆட்சியாளர்கள் கூற வேண்டும். அரசாங்கம் அழுத்தம் கொடுத்து தேர்தலை நடத்த வலியுறுத்த வேண்டும். இன்று முஸ்லிம் தலைவர்கள் முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெற்று அவர்களை ஏமாற்றி வருகின்றனர். மக்களின் வாக்கு உரிமையினை வழங்காது ஏமாற்றி வருகின்றனர். இது குறித்து முஸ்லிம் தலைமைகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 பல தொழில் பேட்டைகள் மூடப்பட்டு வருகின்றன. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான அரசாங்கம் தவறான பொருளாதார கொள்கையில் பயணித்து செல்கின்றது. வாழ்வாதார பிரச்சினைகள் உயர்கின்றன, பொருளாதாரம் வீழ்ச்சி கண்டு செல்கின்றது, நாட்டில் வறுமை அதிகரித்துள்ளது, பொருளாதர வளர்ச்சி வீழ்ச்சி கண்டுள்ளதாக மத்திய வங்கி அறிக்கை தெளிவாக கூறுகின்றது. இவற்றை மீட்டெடுக்க வேண்டிய எந்த வழிமுறையையும் ஜனாதிபதி சுடிக்காட்டவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதிக்கத்தில் ஜனாதிபதிக்கு வாய் திறக்க முடியவில்லை. ஆகவே தீர்வு இல்லாத அரசாங்கம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த அரசாங்கத்தின் அமைச்சரவை மக்களால் தோற்கடிக்கப்பட்ட அமைச்சரவையாகும். செயற்பாடு இல்லாத பாராளுமன்றம் இப்போது இயங்கி வருகின்றது. மக்கள் நிராகரித்த அரசாங்கம் இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கை குறித்து ஜனாதிபதி எதனையுமே குறிப்பிடவில்லை. கடன் வாங்கப்படுகின்றது, ஆனால் அந்த கடன்களில் செய்தது ஒன்றும் இல்லை. இறுதியில் விலை உயர்வு, அரச ஊழியர்களின் சலுகைகள் துண்டிக்கப்படல் மற்றும் வேலை நீக்கம், வரிகளை உயர்த்தல் என்ற நோக்கங்களே இடம்பெறும். இறுதியில் மக்களே நெருக்கப்பட்டு நசுக்கப்பட்டு கஷ்டங்களை அனுபவிக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.

இந்த அரசாங்கம் தாம் ஜனநாயக ஆட்சியாளர்கள் என கூறிக்கொண்டு அராஜக ஆட்சியினை முன்னெடுத்து வருகின்றனர். மாணவர்கள் விரட்டி விரட்டி அடிக்கப்பட்டனர். நெல் உற்பத்தியாளர்கள் புறக்கணிக்கப்பட்டனர். இவற்றை நிவர்த்திசெய்ய அரசாங்கம் எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. 

ஆகவே இந்த மூன்று ஆண்டுகளில் அரசாங்கம் செய்த நல்ல செயற்பாடுகள் என எவையும் இல்லை, எதிர்கால பிரச்சினைகள் பாதிப்புகள் குறித்த எந்த முன்னேற்பாட்டு திட்டங்களும் முன்வைக்கவும் இல்லை. ஆகவே ஜனநாயகத்தை முன்னெடுக்க இந்த பாரளுமன்றத்தை கலைத்துவிட்டு புதிய பாரளுமன்றம் ஒன்றினை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.