tna seithi founder

A TNAUK Publication

அரசியலின் ஸ்திரத்தன்மையினால் பலவீனமடையும் பொருளாதாரம்

Anonymous 2018-02-17 17:30:00

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பின்னர் அரசியலில் ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளதால், நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து பலவீனமடைந்து வருகிறது. இதனால் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கையின் நாணய மதிப்பு இரண்டு நாட்களில் 1.06 ரூபாவினால் சரிவைச் சந்தித்துள்ளது.

கடந்த 12ஆம் திகதி அமெரிக்க டொலர் ஒன்றின் மதிப்பு 156.14 ரூபாவாக காணப்பட்டது. அதற்குப் பின்னரான 14ஆம் திகதி 156.74 ரூபாவாக சரிந்தது. அத்துடன் நேற்று அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் மதிப்பு மேலும் சரிந்து 157.20 ரூபாவாக வீழ்ச்சியடைந்து காணப்பட்டது.

அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருவது உள்நாட்டில் இறக்குமதிப் பொருட்களின் விலையை அதிகரித்து பணவீக்கம் ஏற்படவும், வெளிநாட்டு நாணயக் கையிருப்பு குறைவதற்கான சூழலையும் ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் உறுதிப்பாடு தொடர்ந்தும் மோசமான நிலையில் இருப்பதால் இலங்கையின் பொருளாதார நிலை குறித்து பொருளியல் நிபுணர்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் கொழும்பில் நேற்று செய்தியாளர் சந்திப்பை நடத்திய மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி, அரசியல் தலைவர்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களை விரைவில் முடிவுக்குக் கொண்டு வந்து, உறுதிநிலையை ஏற்படுத்த வேண்டும் என்று கோரியுள்ளார். அரசியல் உறுதிப்பாடு இல்லாததால், நாட்டின் பொருளாதாரம் பலவீனமடைந்து செல்வதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.